நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர்கள், பிரதிநிதிகள், உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நாட்டின் கொரோனா பரவல் நிலவரம் குறித்தும், தொற்றை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும் நாட்டின் அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்டங்களின் பொது, தனியார் சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் mock drill எனப்படும் ஒத்திகை பயிற்சி நடவடிக்கையை மேற்கொள்ள கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களின் மருந்துகள் இருப்பு, படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு போன்றவை தயார் நிலையில் உள்ளதா என ஆய்வு செய்யப்படும்.
மேலும், அனைத்து மாநிலங்களும் கவனத்துடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. பல மாதங்களுக்குப் பின்னர் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இன்று 6,000ஐ கடந்துள்ளது.
கேரளா, டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும், நாட்டில் தொற்று பாதிப்புக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 28,303 ஆக உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டுள்ள நபர்களில் சுமார் 38 சதவீதம் பேர் XBB.1.16 என்ற உருமாறிய தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.