அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுவக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவந்தனர். இதைத் தொடர்ந்து, அப்பதவிகள் நீக்கப்பட்டு, மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. அதன்படி, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி அண்மையில் தேர்வு செய்யப்பட்டார்.
இது தொடர்பான அனைத்து கோப்புகளையும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அதிமுக தரப்பு அனுப்பி வைத்துள்ளது. மேலும், கர்நாடக தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், வழக்குகள் காரணமாக அதிமுகவில் கட்சி ரீதியான மாற்றங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காததால் வேட்பாளர்களை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுகவில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி பிரதீப் எம். சிங் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.