11-05-23
தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 மே7-ம் தேதி பொறுப்பேற்றது. கடந்த ஆண்டில் அமைச்சரவையில் முதன்முதலாக மாற்றம் செய்யப்பட்டது. ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரிடம் இருந்த போக்குவரத்து துறை, சிவசங்கருக்கு மாற்றப்பட்டது.
பிறகு, அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சிறப்பு திட்ட செயலாக்கத் துறைகள் அளிக்கப்பட்டன. அதே நேரம், கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. இதுதவிர, வீட்டுவசதி துறையில் இருந்து சிஎம்டிஏ பிரிக்கப்பட்டு, அறநிலைய துறைஅமைச்சர் சேகர்பாபுவிடம் தரப்பட்டது.
திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சூழலில், கடந்த சில வாரங்களாகவே அமைச்சரவை மாற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், முதல்வர் பரிந்துரையின்பேரில், அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்படுவதாகவும், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான டிஆர்பி ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாகவும் ஆளுநர் மாளிகையில் இருந்து கடந்த 9-ம் தேதி அறிவிப்பு வெளியானது.
இதன்படி, ஆளுநர் மாளிகையில் இன்று காலை10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய அமைச்சராக டிஆர்பி ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.