ஜூன்.2
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் 8-வது நாளாக சோதனை நடத்திவருவதால் அங்கு பரபரப்பு நிலவிவருகிறது-
கரூரில் கடந்த 26ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார், அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரிகள் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர்.
அப்போது, வருமானவரித்துறையின் சோதனைக்கு கரூர் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. அதிகாரிகளும் முற்றுகையிடப்பட்டதால், அசாதாரண சூழ்நிலையை உணர்ந்து கொண்டு சோதனையை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
இதனைத்தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்புடன் 27-ந்தேதி முதல் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், 8வது நாளாக இன்றும் கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தொடர்புடைய இடங்களில் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. ஏற்கனவே 28 இடங்களில் வருமானவரிச் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று மேலும் பல இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்திவருவதால் கரூரில் பரபரப்பும், பதற்றமும் நிலவிவருகிறது.