ஜூன்,26-
இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பல்வேறு நிகழ்வுகளிலும், வெள்ளை மாளிகையில் அரசுமுறை விருந்திலும் கலந்துகொண்டார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமை குறித்த கேள்விக்கு, இந்தியாவில் பாகுபாடு என்பதற்கு இடமில்லை என பிரதமர் மோடி பதில்அளித்தார்.
இந்த பேட்டிக்கு முன்னதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு பிரச்னை குறித்து பிரதமர் மோடியுடன் ஜோ பைடன் பேச வேண்டும். மோடியுடன் நான் பேசியிருந்தால், இதுகுறித்து விவாதித்திருப்பேன்” என்றார்.
இந்நிலையில், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் 6 நாடுகளில் குண்டு போட்டவர்தான் ஒபாமா என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “இந்தியா மீது கடந்த காலங்களில் இது போன்ற புகார்களை எழுப்பியவர்கள் யார் என்பதை இந்த நேரத்தில் உற்று நோக்க வேண்டும். ஒபாமா ஆட்சி காலத்தில் தான் சிரியா, ஏமன், சவுதி, ஈராக் போன்ற 6 இஸ்லாமிய நாடுகள் மீது அமெரிக்கா குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இது போன்று இந்தியாவை குறைகூறும் ஒபாமாவை அமெரிக்க மக்கள் எப்படி நம்புவார்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.