June 02, 2023
கர்நாடகாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஏறத்தாழ 4 நாட்கள் முதலமைச்சர் தேர்வு செய்யும் பணி கடும் இழுபறியில் நீடித்த நிலையில், ஏற்கனவே முதலமைச்சராக இருந்த சித்தரமையாவை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது. இந்நிலையில், சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 20ம் தேதி பதவியேற்றது. கர்நாடகா மாநில சட்டப் பேரவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து இருந்தது. அதில் முக்கியமானது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்குவது, பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகை வழங்குவது, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், இலவச மின்சாரம் போன்ற திட்டங்கள் ஆகும்.
இது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக, முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், அமைச்சர்கள் பரமேஸ்வரா, முனியப்பா, கே.ஜே.கார்கே உள்ளிட்ட 8 அமைச்சர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் தேர்தலில் அறிவித்த 5 வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சித்தராமையா கூறியதாவது:
இன்று எனது தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி , தேர்தலின்போது மக்களுக்கு கொடுத்திருந்த 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசனை செய்தோம். அந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நடப்பு ஆண்டிலேயே நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம். அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் விரைவில் மக்களை சென்றடையும்.
கிருக லட்சுமி திட்டத்தின்கீழ் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும், மாதம் 2 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும். அவர்களது ஆதார்டு கார்டு வங்கி கணக்குடன் இணைக்கப்படும். தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தப் பணியை துவங்க முடியவில்லை. வரும் ஜூன் 15 ஆம் தேதி துவங்கி ஜூலை 15 ஆம் தேதிக்குள் இதற்கான பணிகள் அனைத்தையும் முடித்து ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் என்றில்லாமல் அனைவருக்கும் வழங்கப்படும். இது சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பென்சன் பெற்று வரும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் பொருந்தும்.
அதேபோல் ஜூலை 1ம் தேதி முதல், ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
5 முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன.?
ஒவ்வொரு வீட்டின் தலைவிக்கும் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 2,000 வழங்கப்படும்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 மற்றும் வேலையில்லாத பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும்.
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
கர்நாடகாவில் பெண்கள் பயணம் செய்ய இலவச பேருந்து டிக்கெட்டுகள் வழங்கப்படும்.