டிசம்பர்-25.
தமிழ் நாடு ஆளுநர் ரவி மாற்றப்பட வேண்டும் என்று பல் வேறு கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில் அவரை மாற்றாதது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்து உள்ளது.
ஏன் என்றால் பல்வேறு மாநில ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மாற்றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் அந்த மாநிலத்திற்கு மிசோரம் ஆளுநராக உள்ள ஹரி பாபுவை நியமனம் செய்திருக்கிறார்.
அதே வேளையில் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், மிசோரம் ஆளுநர் பதவியில் அமர்த்தப்பட்டு உள்ளார்.
சர்ச்சைகளின் நாயகனாக திகழ்ந்த ஆரிப் முகமது கான் கேரள மாநிலத்தின் ஆளுநர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு பீகாருக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
பீகார் ஆளுநராக இருந்த ராஜேந்திர அர்லேகர் கேரளாவுக்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
கடந்த சில மாதங்களாக கலவரப் பூமியாக திகழும் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநர் பதவியில் முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா அமர்த்தப்பட்டு இருக்கிறார்.
இப்படி ஐந்து மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி உள்ள மத்திய அரசு, சர்சைக்கு உரிய ரவியை தமிழ்நாடு ஆளுநர் பதவியில் மாற்றாதது ஏன் என்ற கேள்வி, வலை தளங்களில் பரவி வருகிறது.
இந்த நிலையில் ஆளுநர் ரவி நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ்நாட்டு அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கி இருக்கிறார். அப்போது இருவரும் தமிழ்நாடு பற்றி என்னென்ன பேசினார்களோ யாருக்குத் தெரியும்?
*