இட்லித்தட்டு துவாரத்தில் சிக்கிய குழந்தையின் விரல் – கன்னியாகுமரி அருகே பரபரப்பு

ஏப்ரல்.18

கன்னியாகுமரியில் இட்லி தட்டு துவாரத்தில் சிக்கி தவித்த 4 வயது குழந்தையின் கை விரலை, தீயணைப்புத்துறையிர் நீண்ட நேரம் போராடி வெளியே எடுத்தனர்.

கன்னியாகுமரி லூர்துமாதா தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஆரோக்கிய சேல்வியஸ். இவருக்கு ஜாபி என்ற 4 வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தை இட்லி தட்டை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக, குழந்தை ஜாபியின் கை விரல் இட்லி தட்டில் இருக்கும் துவாரத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் பயத்தில் குழந்தை கத்தி சத்தமிட்டு அழ ஆரம்பித்தது.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் எவ்வளவு முயன்றும் குழந்தையின் விரலை இட்லி தட்டின் துவாரத்திலிருந்து மீட்க முடியவில்லை. இதனால் குழந்தையை கன்னியாகுமரி தீயணைப்பு அலுவலகத்திற்கு எடுத்துச்சென்ற பெற்றோர், குழந்தையின் விரலை பத்திரமாக எடுத்துவிடுமாறு தீயணைப்புத்துறையினரிடம் உதவி கோரினர்.

இதையடுத்து, மாவட்ட அலுவலரின் அனுமதியுடன் நாகர்கோவிலிலிருந்து அவசரகால மீட்பு ஊர்தி வரவழைக்கப்பட்டு, கருவிகள் உதவியுடன் இட்லி தட்டு சிறிது சிறிதாக வெட்டி எடுக்கப்பட்டு குழந்தை விரல் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டது. குழந்தையின் பெற்றோர் தீயணைப்புத் துறையினருக்கும் அவசர கால மீட்பு போலீஸாருக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *