நாட்டில் இப்போது அரசாங்கத்தை திருடும் சில திருடர்களும் வந்துள்ளனர். அவர்கள் ஜனநாயகத்தை திருடுகிறார்கள் என்று பா.ஜ.க.வை மறைமுகமாக பிரியங்கா காந்தி தாக்கினார்
கர்நாடகாவில் பிரியங்கா காந்தி காங்கிரஸின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில் பா.ஜ.க. மற்றும் மோடியை மறைமுகமாக தாக்கினார். பிரியங்கா காந்தி பேசுகையில், தற்போது நாட்டில் பல்வேறு வகையான திருடர்கள் உள்ளனர். சிலர் வீடுகளில் திருடுகிறார்கள். இப்போது அரசாங்கத்தை திருடும் சில திருடர்களும் வந்துள்ளனர். அவர்கள் ஜனநாயகத்தை திருடுகிறார்கள். அவர்களை நிறுத்துங்கள். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், கர்நாடக முதல்வருக்கு (பசவராஜ் பொம்மை) எப்படி 40 சதவீத கமிஷன் பெறுவது என்பதில் மட்டுமே ஆர்வம். இரட்டை எந்திர ஆட்சி என்ற வெற்று வாக்குறுதிகளால் கர்நாடக மாநிலம் சூறையாடப்பட்டுள்ளது. இந்த ஜூம்லேபாஸ் தலைவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டிய நேரம் இது. கர்நாடகாவில் ஆட்சியில் இருந்து அவர்களை (பா.ஜ.க.) வெளியேற்ற வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.
கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைவதற்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் அங்கு அனைத்து கட்சிகளும் மிகவும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.