ஏப்ரல் 19
பில்கிஸ் பானோ கூட்டு பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரம் தென்மாநிலங்களை உலுக்கியது. வட மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது ஏவப்படும் மதவாத தாக்குதலையும், அதற்கு பின்னால் முதலை கண்ணீர் வடிக்கும் மதவாத அரசியலையும் அம்பலப்படுத்தியது. அப்போது, சபர்மதி எக்ஸ்பிரஸ் பெட்டி எரிக்கப்பட்டது. இதையொட்டி வெடித்த பயங்கர கலவரத்தில் 790 இஸ்லாமியர்கள், 254 இந்துக்கள் உட்பட 1,044 பேர் கொல்லப்பட்டனர். 2,500 பேர் காயமடைந்தனர். 223 பேர் எங்கு சென்றார்கள் என்பதே தெரியவில்லை. அவர்களை சடலமாகவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், பில்கிஸ் பானோ (19) என்ற கர்ப்பிணி பெண் மார்ச் 3 அன்று தனது மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 15 பேருடன் கிராமத்தை விட்டு வெளியேறி ஒரு வயலில் தஞ்சம் அடைந்தார். அப்போது 20-30 பேர் கொண்ட கும்பல் அவர்களை பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோவை மறைவான இடத்துக்கு தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர்.
மேலும், பில்கிஸ் பானோவின் குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். பில்கிஸ் பானோவின் மூன்று வயது மகள் சலேஹாவை பாறையில் முட்டி கொடூரமாக கொன்றனர். மற்ற 6 பேர் உயிரை காப்பாற்றிக்கொண்டு தப்பினர். கர்ப்பிணியை வன்கொடுமை செய்த வழக்கில்,
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜஸ்வந்த்பாய் நாய், கோவிந்த்பாய் நாய், ஷைலேஷ் பட், ராதேஷாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹானியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகிய 11 பேர் 2004ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷ்யாம் ஷா என்பவர் தண்டனையை ரத்து செய்யக் கோரியும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரியும் குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் குஜராத் அரசிடம் முடிவை எடுக்குமாறு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து மத்தியிலும், குஜராத்திலும் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசு 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது. குரூர குற்றவாளிகளை விடுதலை செய்து கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட அநீதியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தபோது, பில்கிஸ் பானோ வழக்கில் மாநில அரசு பிறப்பித்த உத்தரவின் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், குஜராத் மாநில அரசும், மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தின் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு மனு அளித்தன.
அந்த விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்தினா ஆகியோர் முன்பு வந்தது. அப்போது நீதிபதிகள் ” சமூகத்தை பெருமளவில் பாதிக்கும் இத்தகைய கொடூரமான குற்றங்களை மனதில் வைத்து அரசு அதிகாரத்தை செலுத்த வேண்டும். மாநில அரசின் (குஜராத்) முடிவுக்கு மத்திய அரசு ஒத்துப்போவதில் அர்த்தமே இல்லை. இன்று பில்கிஸ் பானோவுக்கு நடந்தது நாளை உங்களுக்கோ அல்லது எனக்கோகூட நடக்கலாம். தண்டனை காலத்தில் குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகள் அரசு பரோல் வழங்கியுள்ளது. ஒரு குற்றவாளி 1500 நாட்கள் பரோலில் இருந்துள்ளார். என்ன மாதிரியான கொள்கையை பின்பற்றுகிறீர்கள்? கூட்டு பாலியல் வன்கொடுமையையும், கூட்டு படுகொலை நிகழ்வுகளையும் ஒரு கொலை சம்பவத்துடன் ஒப்பிடக்கூடாது” என நீதிபதி கே.எம். ஜோசப் கூறினார். இதனை தொடர்ந்து மனு மீதான விசாரணையை மே 2 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.