ஏப்ரல்.27
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
தமிழகத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுகவினரிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்தது. இதனால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் பரவின. இதைத் தொடர்ந்து, ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் அதிமுகவுடனான கூட்டணி இருப்பதாகக் கூறினார். அதை, எடப்பாடி பழனிசாமியும் ஆமோதித்தார்.
இதைத் தொடர்ந்து, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களம் இறங்குவதாக அறிவித்த அதிமுக, புலிகேசி தொகுதியில் வேட்பாளரையும் நிறுத்தியது. பின்னர், கூட்டணி கட்சியான பாஜகவின் வேண்டுகோளை ஏற்று, வேட்பாளரை அதிமுக திரும்பப்பெற்றது.
இதற்கிடையே, உச்சநீதிமன்ற உத்தரவின்படி அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியை, தேர்தல் ஆணையமும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அதன்மூலம் அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்தது.
இந்நிலையில், கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமார் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்து விவாதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, இன்றும் பாஜக மூத்த தலைவர்கள் சிலரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.