செப்டம்பர்,01-
கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் வருமானத்திற்கு அதிகமாக 1கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 2012ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டார். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது.இந்த நிலையில் 11 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரிக்கப்போவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.
அப்போது அவர், லஞ்ச ஒழிப்பு துறை மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.அதன் விவரம்:
குற்ற வழக்கு விசாரணை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. குற்றவியல். சட்டங்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு இனி பொருந்தாது என அறிவித்து விடலாம். . எம்.பி., எம்.எல்.ஏ.- க்கள் மீதான வழக்குகளின் விசாரணையில் பின்பற்றப்படும் நடைமுறையில் பிரச்சனைகள் உள்ளன. சுதந்தரமாக செயல்பட வேண்டிய லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சி மாறும் போதெல்லாம், ஆட்சியாளர்களுக்கு ஏற்ப, நிறம் மாறும் பச்சோந்திகள் போல் தன்னை மாற்றி பச்சோந்தியாக மாறிவிட்டது. இந்த தவறை அனுமதித்தால் புற்றுநோய் போல் சமுதாயத்தை சீரழித்து விடும்.லஞ்ச ஒழிப்புத்துறை உருவாக்கப்பட்டதன் நோக்கமும் அழிந்து விடும்.
இந்த வழக்குதான் மற்ற வழக்குகளுக்கு முன்னோடியாக உள்ளது. எனவே கடந்த 2012 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை இப்போது மறு ஆய்வு செய்ய முடியுமா? என கேள்வி எழலாம்.ஆனால் 2002 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் , அவ்வாறு மறுஆய்வு செய்ய இந்த நீதிமன்றத்துக்கு முழு அதிகாரம் உள்ளது’’
இவ்வாறு பொங்கிய நீதிபதி,இந்த வழக்கில் பதில் அளிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், ஓ.பன்னீர்செல்வதுக்கும் நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டு இருக்கிறார்.
சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்.தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டது தொடர்பான வழக்குகளையும் இதே நீதிபதி மீண்டும் விசாரணைக்கு எடுத்து உள்ளது நினைவுகூறத்தக்கது.
என்ன நடக்குமோ என்ற கலக்கத்தில் உள்ள இவர்களின் பட்டியலில் பன்னீரும் சேர்ந்து உள்ளார்.
000