June 01, 2023
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்று ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள ராகுல்காந்தி கலிபோர்னியா மாகாணம் சாந்தா கிளாராவில் இந்தியர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் அக்கட்சியை வீழ்த்தி வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெற்றி பெற்றதை மட்டுமே மக்கள் பார்த்தனரே தவிர நாங்கள் கையாண்ட உத்திகளை புரிந்து கொள்ளவில்லை. கர்நாடக தேர்தலை முற்றிலும் மாறுபட்ட நிலையில், சந்தித்த காங்கிரஸ், பிரத்யேக பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும். எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
நான் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயண அனுபவத்தை கொண்டு கர்நாடகத்தில் தேர்தல் பிரச்சார உத்தி வகுக்கப்பட்டது. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் செலவிட்டதை விட, 10 மடங்கு பாஜக பணம் செலவிட்டது. இந்தியாவை ஆளும் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்டிகள் ஒற்றுமை மட்டும் போதாது. மாற்றுப் பார்வை ஒன்றும் தேவைப்படுகிறது. ஒரு மாற்றுப்பார்வையை உருவாக்குவதில் நான் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணம் முதல் அடி ஆகும். எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி தலைவர் முடிவு செய்வார். எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதுடன் ஒரு புது பாதையை காட்ட உள்ளன என்பதையும் மக்களை உணரச் செய்ய வேண்டும். எந்த பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒவ்வொருவரின் குரலும் மதிக்கப்பட வேண்டும், கேட்கப்பட வேண்டும். இந்தியாவில் அரச அமைப்புகளை பயன்படுத்தி நாட்டு மக்களை பாஜக அச்சுறுத்தி வருகிறது.
பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக செயல்படுவது கடினமாக காரியமாகிவிட்டது. அரசியல் கட்சிகள் செயல்படுவதே கடினமானதாக ஆனதால்தான், இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டேன். மக்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஊடகங்கள் அனைத்தையும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸூம் தம் கட்டிப்பாட்டில் கொண்டுள்ளது. பாஜக ஆட்சியில் ஊடகங்களால் கட்டப்படுவது இந்தியாவின் உண்மையான சித்திரம் அல்ல. இந்தியாவில் நிலவாத ஒரு அரசியல் பிம்பத்தை பாஜக அதரவு ஊடகங்கள் சித்தரிக்கின்றனர்” என்றார்.