செப்டம்பர்,12
மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியிலும், அடுத்த ஆண்டு ஜனவரியிலும் முடிவடைகிறது. எனவே ஒரே நேரத்தில் 5 மாநில சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர்கள் இந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று முன்னேற்பாடுகளை பார்வையிட்டு வருகிறார்கள். மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே ஆய்வுகளை முடித்து விட்டனர். ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இந்த மாதம் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக 5 மாநில தேர்தல் தேதி வெளியிடப்படும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘தேர்தல் நடப்பது சந்தேகமே’ என பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ஐயம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் 5 மாநில தேர்தல்களை தள்ளி வைக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துடன் தான் ’ஒரு நாடு ஒரு தேர்தல்’ பிரசாரத்தை பாஜக மேற்கொண்டுள்ளது’ என்றார். ’இந்த 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தோற்று விடுவோம் என பாஜக பயப்படுகிறது- இந்த தோல்வி மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கும் என பாஜக அச்சம் கொண்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தல் வரை ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற பெயரில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலை தள்ளி வைக்கப் போகிறார்கள்- அதுவரை இந்த மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும்.” என்று புதிய குண்டு வீசியுள்ளார், பூஷன்.
தேர்தல் தள்ளிவைக்கப்படும் பட்சத்தில் இரு தேசிய கட்சிகளும் ஆனந்த கூத்தாடும்.அந்த மாநிலங்களில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது புதிராக இருப்பதே காரணம்.
0000