June 06, 23
ஒடிசாவின் பாலசோரில் 3 ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தை வைத்து அரசியல் துவங்கி விட்டது.
இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தத் துவங்கி விட்டன. பிரதமர் வாஜ்பாய் தலைமையிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சியிலும் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா தற்போது மேற்குவங்க முதல்வராக உள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மம்தா கூறும்போது, ‘நான் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது, இதுபோன்ற விபத்துக்களில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் அவர்கள் குடும்பத்தில் ஒருவரை அரசு பணியில் அமர்த்த உத்தரவிட்டிருந்தேன். தற்போது பிரதமர் மோடி அரசு நிவாரணம் மட்டுமே அளித்துள்ளது.
முன்பதிவில்லாத பெட்டிகளில் மிக அதிகமாக பயணிகள் இருந்தனர். இறந்தவர்கள் தொடர்பான சரியான எண்ணிக்கையை மறைக்காமல் அரசு வெளியிட வேண்டும். தனியாக சமர்ப்பிக்கப்பட்டதை மத்திய பொது பட்ஜெட்டுடன் ஒன்றாக இணைந்தபோதே ரயில்வே துறை நாசமடையத் துவங்கி விட்டது. கடந்த 2002-ல் கோத்ராவில் ரயில் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்தை நாம் அறிவோம்.
எனவே, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தன் பதவியை ராஜினாமா செய்ய நாம் வற்புறுத்தவில்லை. மாறாக, இந்த மத்திய அரசையே மக்கள் தேர்தலில் புறக்கணித்து முடிவிற்கு கொண்டுவர வேண்டும்’ என்றார்.
இதனிடையே, பாஜகவின் ஐடிபிரிவின் தலைவர் அமித் மாளவியா பதிவேற்றிய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: மத்திய அமைச்சராக நிதிஷ் குமார் இருந்த காலத்தில் 79 ரயில் விபத்துக்களும், 1,000 ரயில்களும் கவிழ்ந்தன. இக்காலகட்டத்தில் 1,527 பேர் உயிரிழந்தனர்.
மம்தா பானர்ஜியின் காலத்தில் 54 விபத்துகளும், 839 ரயில்களும் கவிழ்ந்ததில் 1,451 பேர் உயிரிழந்தனர். லாலு பிரசாத் யாதவ் காலத்தில் 51 விபத்துக்களும், 550 ரயில்களும் கவிழ்ந்தன. இதில் 1,159 பேர் உயிரிழந்தனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அமித் மாளவியா மேலும் ஒரு ட்விட்டர் பதிவில் குறிப்பிடுகையில், ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது நடந்த விபத்துகளில் உயிரிழந்த சம்பவங்கள் எந்த ஒரு பேரழிவிற்கும் குறைந்ததல்ல. எனவே, கடந்த ஏழரை ஆண்டுகளாக ஒரு திறமையான அமைச்சராக ரயில்வே துறையில் பணியாற்றும் அஸ்வினி வைஷ்ணவை பற்றி குறைகூற எதிர்க்கட்சிகளுக்கு அருகதை கிடையாது. விபத்திலிருந்து விடுபட்டு நிவாரணப் பணிகளில் இறங்கவேண்டிய நேரம் இது. தவிர, புகார் அளிப்பதற்கானதல்ல’ எனத் தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த தமது மாநிலத்தவர் குடும்பங்களுக்கு முதல்வர் மம்தா கூடுதலாக ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே, மத்திய அரசு ரூ.10 லட்சம் அறிவித்திருந்தது. தற்போது மம்தா அரசின் சார்பில் காயம் அடைந்த பயணிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் எந்த காயமும் அடையாதவர்களுக்கு விபத்தின் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு, 6 மாதங்களுக்கு தலா ரூ.5,000 அளிப்பதாகவும் மம்தா அறிவித்தார். இத்துடன் அப்பயணிகளின் குடும்பத்திற்கு ரூ.2,500 மதிப்புள்ள உணவுப் பொருட்களும் அளிக்க உத்தரவிட்டுள்ளார் மம்தா.
ஒடிசா விபத்து தொடர்பாக பெரிய அளவில் ஒரு செய்தியாளர் கூட்டம் நடத்தவும் முதல்வர் மம்தா திட்டமிட்டுள்ளார். இதில் அவருடன் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும் எதிர்க்கட்சி தலைவர்களில் முக்கியமானவருமான பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரையும் சேர்க்க முயன்று வருகிறார்.