June 10, 23
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த பாகாநாகா அரசு உயர்நிலை பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது.
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தின் துயரத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில் மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மின்னல் வேகத்தில் மோதியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய இந்த பயங்கர விபத்தில், 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த பாகாநாகா அரசு உயர்நிலை பள்ளிக்கு செல்வதற்கு மாணவ, மாணவிகள் அச்சம் தெரிவிப்பதாக பெற்றோர்கள் புகார் அளித்தனர். பெற்றோர் புகாரை தொடர்ந்து பள்ளியின் ஒரு பகுதியை இடித்து புதிதாக கட்டும் பணிகள் தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை முடிவதற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜூன் 19ம் தேதிக்குள் இடித்த இடத்தில் புதிய வகுப்பறை கட்டி முடிக்கப்படும் என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.