ஒடிசா அருகே கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் பாலசோர் மாவட்டம் அருகே வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பஹானாகா வனப்பகுதியில் விரைவு ரயில் வேகமாக வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு ரயில் பயங்கரமாக மோதியது. ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் கோரமண்டல் விரைவு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன.
தகவல் அறிந்து மீட்புக்குழு அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 50-க்கும் மேற்போட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
பஹானாகா வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக 2 ரயில்களும் ஒரே பாதையில் வந்து மோதியதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓடிசா முதலமைச்சரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்
“ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்”
“விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் மீட்பு மற்றும் உதவிப்பணிகளுக்காக அமைச்சர் சிவசங்கர் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு நாளை ஒடிசா செல்கின்றனர்.