மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் 7 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று 10,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,45,401-லிருந்து 4,48,57,992 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 63,562-லிருந்து 65,286 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,190-லிருந்து 5,31,230 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் விமானப்படை தளபதிகள் மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா உறுதியாகி உள்ளது. லேசான அறிகுறியுடன் வீட்டில் தனிப்படுத்தப்பட்டுள்ள ராஜ்நாத் சிங் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.