June 07, 23
காஞ்சிபுரம் படப்பையில் இலவசமாக ஜூஸ் மற்றும் பிரட் ஆம்லேட் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் விஜயலட்சுமி. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜெயமாலா மற்றும் இரண்டு பெண் காவலர்களுடன் படப்பை பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் செயல்பட்டு வரும் கடைக்கு சென்று உள்ளனர்.
அந்த கடையில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு காவலர்களும் ஜூஸ் ,பிரட் ஆம்லெட், சாக்லேட், குடிநீர் கேன்கள் போன்றவற்றை வாங்கிக்கொண்டு அதற்கான பணம் தர மறுத்து தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கடையின் உரிமத்தை ரத்து செய்து விடுவதாகவும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதுகுறித்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் விசாரணையில் ஈடுபட்டார். மேலும் சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றம் உறுதியானதையடுத்து, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, ஓட்டுநர் ஜெயமாலா, மற்றும் இரு பெண் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். காவல் ஆணையர் அமல்ராஜ் நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்.