May 26, 2023
கரூரில் செந்தில்பாலாஜியின் தம்பிக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் ஐ.டி.ரெய்டுக்கு மத்திய படையினர் பாதுகாப்புக்கு வர வாய்ப்புள்ளது.
டாஸ்மாக் மற்றும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. நடந்து வருகிறது. இதற்கு பின்னால் செந்தில்பாலாஜியை குறித்து அண்மையில் வெளியான ஒற்றை புகைப்படம்தான் காரணம் என்கின்றனர்.
அண்மையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சொந்த ஊரில் 150 கோடிக்கு புதிய பிரமாண்ட பங்காளவை கட்டி வருவதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றசாட்டு வைத்தார். மேலும், கட்டுமான பணிகள் நடைபெறும் புகைப்படத்தையும் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை மற்றும் கரூரில் உள்ள வீடுகளிலும், சகோதரரின் வீடுகளிலும் இன்று (மே 26) வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அமைச்சர் அதனை மறுத்துள்ளார்.
செந்தில்பாலாஜியின் விளக்கத்தில், எனது தம்பி மற்றும் தம்பிக்கு தெரிந்தவர்கள் வீடுகளில்தான் வருமான வரித்துறை சோதனை நடந்து வருவதற்காக கூறினார். இந்த நிலையில், கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெற்று கொண்டிருந்தபோது திமுகவினர் முற்றுகையிட்டனர்.
ஒரு பெண் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இந்நிலையில், எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து புறப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது போலீஸ் பாதுகாப்பு ஏன் போடவில்லை என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு கரூர் எஸ்.பி சுந்தரவதனம் விளக்கம் கொடுத்துள்ளார். ‘ வருமானவரி சோதனைக்கு வருவதற்கு முன்கூட்டியே காவல்துறைக்கு தகவல் அளிக்கப்படவில்லை. சோதனைக்கு சி.ஆர்.பி.எப் வீரர்களையும் அழைத்துவரவில்லை. முறையான தகவல் அளிக்கப்படவில்லை. தற்போது 9 இடங்களில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
தாக்குதல் தொடர்பாக வருமான வரித்துறையினர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். இதற்கிடையே திமுகவினரின் அத்துமீறலால் கலக்கம் அடைந்துள்ள அதிகாரிகள் தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பை கோருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.