கர்நாடகா மாநிலத் தேர்தலில் பலரது கவனத்தையும் ஈர்க்கும் சொரபா சட்டமன்ற தொகுதியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் பங்காரப்பாவின் மகன்களான குமார்பங்காரப்பா பாஜகவிலும் மது பங்காரப்பா காங்கிரஸிலும் வேட்பாளராக களம் இறங்கி உள்ளனர்.
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற 10ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திலேயே பலரும் பேசக்கூடிய தொகுதியாகவும் பலரது கவனத்தையும் ஈர்க்கக் கூடிய தொகுதியாகவும் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள சொரபா தொகுதி உள்ளது. ஏனென்றால் சொரபா தொகுதி கர்நாடகா மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பங்காரு அப்பாவின் தொகுதி. அதுமட்டுமின்றி பங்காரப்பாவின் மகன்களான குமார்பங்காரப்பா, மதுபங்காரப்பா ஆகிய இருவரும் எதிரெதிர் அணியில் அதே தொகுதியில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
குமார் பங்காரப்பா சொரபா தொகுதியில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய நிலையில், தற்போது நடைபெறக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அந்த தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அதேபோல் இவரை எதிர்த்து இவரது தம்பியான மதுபங்காரப்பா காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக இறக்கப்பட்டு, அவரும் இந்த தேர்தலில் களம் காண்கிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பாஜக காங்கிரஸ் என்ற பலம் வாய்ந்த தேசிய கட்சிகளின் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டு போட்டா போட்டி போடுவது அந்தத் தொகுதி மக்கள் மட்டுமின்றி கர்நாடக மாநிலம் முழுவதும் பேசக்கூடியதாக உள்ளது. மேலும் குமார்பங்காரப்பா அதேபோல் மது பங்காரப்பா ஆகிய இருவருமே அரசியலில் மட்டுமல்ல திரைத் துறையிலும் பயணித்துள்ளனர். இந்நிலையில் இந்த தேர்தலில் ஒருவரை ஒருவர் வீழ்த்தி வெற்றியடைய வேண்டும் என்று இருவருமே பல்வேறு யுத்திகளை கையாண்டு தீவிர பிரச்சாரத்தில் சொரபா தொகுதியில் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பாஜக சார்பில் போட்டியிடக்கூடிய குமார் பங்காரப்பா கூறுகையில், “இந்த தேர்தல் சிறந்த தேர்தலாக உள்ளது. ஏனென்றால் சொரபா தொகுதியிலும் கர்நாடகா மாநிலம் முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிறந்த முதலமைச்சர் ஆக பசுவராஜ பொம்மை செயல்பட்டுள்ளார். மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக என்பதால் டபுள் இன்ஜின் அரசாக செயல்பட்டது. பிரதமரே இந்தியாவிலேயே கர்நாடகாவை முன்மாதிரியான மாநிலம் என்று தெரிவித்துள்ளார். சொரபா தொகுதி பொருத்தவரை ஏற்கனவே நான்கு முறை நான் எம்எல்ஏவாக இருந்த நிலையில் தற்போது ஐந்தாவது முறையாக பாஜக சார்பில் வேட்பாளராக களம் இறங்கி உள்ளேன்.
மீண்டும் பாஜக கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்ற மிகுந்த நம்பிக்கை உள்ளது. வருகின்ற 13ஆம் தேதி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சொரபா தொகுதியை பொருத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக தினசரி பணி செய்து வந்துள்ளேன், எனக்கு எதிரணியில் எனது சகோதரர் என்னை எதிர்த்து களம் இறங்கி உள்ளார், கடந்த சில தேர்தல்களில் எதிர்பாராத விதமாக பாரம்பரிய சண்டை அவருக்கும் எனக்கும் நடந்து வருகிறது. நாங்கள் எப்போதும் சகோதரர்கள் தான் ஆனால் தேர்தல் தேர்தல்தான். எனது சகோதரர் என்னிலிருந்து வேறுபட்டு உள்ளார். அவர் சமாஜ்வாடி, ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு சென்று தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார்.
காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் முடிவுக்கு வந்தது. தமிழ்நாட்டில் எங்கே காங்கிரஸ் இருக்கிறது? காங்கிரஸ் அங்கு இல்லை. தமிழ்நாட்டில் என்ன நிலை இருந்ததோ அதே நிலை கர்நாடகாவிலும் காங்கிரஸிற்கு ஏற்பட்டு வருகிறது. மக்கள் காங்கிரசை நிராகரித்து வருகின்றனர். அடுத்த தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் என்ற கட்சியே இருக்காது. மத்தியிலும் சரி கர்நாடக மாநிலத்திலும் சரி ஒரே ஒரு கட்சி தான் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை எதிர்த்து எனது சகோதரர் போட்டிட்டு வருகிறார். தொடர்ந்து அவர் தோல்வியே தழுவி வருகிறார். பல்வேறு கட்சிகளுக்கு சென்று என்னை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்து தான் உள்ளார். மக்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள். மக்கள் தந்திரமான பொய்யான அரசியலை விரும்பவில்லை” எனக் கூறினார்.