May 16,2023
காங்கிரஸ் கட்சி பலமாக உள்ள மாநிலங்களில் அக்கட்சிக்கு ஆதரவளிக்கத் தயார். இருப்பினும், காங்கிரஸ் எங்களின் ஆதரவை விரும்பினால்,திரிணமூலுக்கு அக்கட்சி அதே அணுகுமுறையை திருப்பித் தர வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய மம்தா பானர்ஜி, “காங்கிரஸ் எந்தந்த மாநிலங்களில் எல்லாம் வலுவாக இருக்கிறதோ, அவர்கள் அங்கே போராட வேண்டும். நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்போம். இருப்பினும், மற்ற அரசியல் கட்சிகளுக்கு காங்கிரஸும் இதேபோன்ற ஆதரவைக் காட்ட வேண்டும். கர்நாடகாவில் திரிணமூல் காங்கிரஸ் உங்களை ஆதரிப்பது போலவும், மேற்கு வங்கத்தில் நீங்கள் எனக்கு எதிராகப் போவது போலவும் கொள்கை செல்ல முடியாது. நீங்கள் ஏதாவது நல்லதை அடைய விரும்பினால், சில பகுதிகளில் தியாகம் செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.
திரிணமூல் காங்கிரஸின் கணக்கீட்டின்படி காங்கிரஸ் 200 இடங்களில் வலுவாக உள்ளது என்றார் பானர்ஜி. அவர்,”உ.பி.யில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி வலுவாக உள்ளது. எனவே நாங்கள் அவர்களை ஆதரிக்க வேண்டும். எனினும், காங்கிரஸ் அங்கு போராடக்கூடாது என்று நான் கூறவில்லை. அதையெல்லாம் நாம் விவாதிக்கலாம். இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அந்தந்த மாநிலத்தில் வலுவாக இருக்கும் கட்சியை ஆதரிக்க வேண்டும். எந்தப் பிராந்தியத்திலும் யார் வலுவாக இருந்தாலும் ஆதரிக்கப்பட வேண்டும். உதாரணமாக, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, மேற்கு வங்கத்தில் டிஎம்சி, பீகாரில் ஜேடியு-ஆர்ஜேடி கூட்டணி பிறரால் ஆதரிக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.
கடந்த காலங்களில், மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தனது விமர்சனங்களுடன் குரல் கொடுத்தார். 2024 பொதுத் தேர்தலில் காங்கிரஸுடன் எந்த கூட்டணியும் சாத்தியமில்லை என்றும் மம்தா நிராகரித்தார். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற சில நாட்களுக்குப் பிறகு, மம்தா இப்போது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்த புதிய வியூகம் குறித்து குரல் கொடுத்துள்ளார்.