‘ஜெயிலர் -2’படத்தில் ரஜினிகாந்த் மனைவியாக நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி , மலையாள நடிகையிடம், பணம் பறிக்க ஒரு கும்பல் முயன்றுள்ளது. இதனை அந்த நடிகையே அம்பலப்படுத்தியுள்ளார்.
மலையாளத்தில் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற சினிமா மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் ஷைனி சாரா. மலையாள படங்களில் கேரக்டர் வேடங்களில் நடித்து வருகிறார்.
அவரிடம் பணம் பறிக்க தமிழகத்தை சேர்ந்த மோசடி கும்பல் முயன்றுள்ளது.
இந்த ஆசாமிகளிடம் ஏமாந்து விட வேண்டாம் என எச்சரித்து , நடிகை ஷைனி சாரா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
‘கொஞ்ச தினங்களுக்கு முன் எனது ‘வாட்சப்’ போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. ரஜினியின் ‘ ஜெயிலர் -2’ படத்தில் நடிக்க நடிகர் –நடிகைகள் தேர்வு நடக்கிறது – இதற்காக நடிகர்களை தேர்வு செய்யும் ஏஜென்சி உங்கள் பெயரை பரிந்துரை செய்துள்ளது
அந்த படத்தில் நீங்கள் ரஜினியின் மனைவியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள் – இது குறித்து சுரேஷ்குமார் என்பவர் உங்களை தொடர்பு கொண்டு பேசுவார்’ என அந்த நபர் தெரிவித்தார்.
இரண்டு நாள் கழித்து சுரேஷ்குமார் , வாட்சப் ஹாலில் பேசினார்- ஜெயிலர் -2 படத்தில் ரஜினியின் மனைவியாக நடிக்க நீங்கள் தேர்வாகி உள்ளீர்கள் என்று சொன்னார்.
எனக்கு சந்தேகம் வந்தது – முதல் பாகத்தில், ரஜினி மனைவியாக ரம்யா கிருஷ்ணன் அல்லவா நடித்திருந்தார் ? என்று கேட்டேன் – அவர், கொஞ்ச நேரம் யோசித்து விட்டு ‘இது ரஜினி நடிக்கும் வேறொரு படம்.
‘இந்தப்படத்தில் நடிக்க உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் -. நடிகர் சங்கத்தில் உறுப்பினர் கார்டு எடுக்க வேண்டும் –அப்போதுதான் நடிக்க முடியும் – கார்டு எடுக்க 12, 500 ரூபாய் செலவாகும். அதனை அனுப்பி வையுங்கள் என்றார்.
இங்கே அதெல்லாம் கிடையாதே – எனக்கு இரண்டு நாள் டைம் கொடுங்க என்றேன் –அவர்,’ நான் வேண்டுமானால் முதல் தவணையை செலுத்துகிறேன் –பிறகு, நீங்கள் பணத்தை அனுப்பி வைக்கலாம் ‘ என்றார்.
எனக்கு சந்தேகம் வலுத்தது . எனது சக நடிகைகளான மாலா பார்வதி, லிஜோமோல் ஆகியோர் தமிழில் நடித்துக்கொண்டிருப்பதால் அவர்களிடம் இது குறித்து கேட்டு தெரிந்து கொள்ள போன் செய்தேன் –இருவரும் எடுக்கவில்லை-
எனது தோழியான இன்னொரு நடிகையை தொடர்பு கொண்டேன்
அவர்தான் ,’இது மோசடி கும்பல் வேலை- ஏமாந்து விடாதே’ என்று எச்சரித்தார்’
“என்னை ஏமாற்ற முயன்ற கும்பலிடம் சக நடிகைகள் ஏமாந்து விட வேண்டாம் என்பதால் இந்த தகவலை சொல்கிறேன்’ என அந்த வீடியோவில் ஷைனி சாரா தெரிவித்துள்ளார்
.–