கோவை வ.உ.சி மைதானத்தில் வரும் 7ம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரலாற்றுப் புகைப்பட கண்காட்சி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார்.
கோவை வ.உ.சி மைதானத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்தப் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்த புகைப்படக் கண்காட்சி சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையில் நடைபெற உள்ளது.
வ.உ.சி மைதானத்தில் வரும் 7ஆம் தேதி இந்தப் புகைப்பட கண்காட்சி மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகிறது. ஏப்ரல் 14ஆம் தேதிவரை இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெறுகிறது. கோவைக்கு முதலமைச்சர் கொடுத்த திட்டங்கள்குறித்த புகைப்படங்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறும்.
இந்தக் கண்காட்சிக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் அழைத்து வரப்படுவார்களா? என்ற கேள்விக்கு, யாரையும் கட்டாயப்படுத்தி அழைத்து வருவதில்லை. விருப்பத்தின் பெயரால் மட்டுமே கண்காட்சிக்கு வருவார்கள் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் கல்பனா, முன்னாள் எம்பி நாகராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.