“சிறிது நேரம் அமைதி காக்கவும்”ஆளுநர் ரவிக்கு கனிமொழி சொன்ன அறிவுரை.

எதையாவது செய்வது, அல்லது எதையாவது பேசுவது என்பது தமிழக ஆளுநருக்கு வழக்கமாகி விட்டது. செந்தில்  பாலாஜி டிஸ்மிஸ் விவகாரத்தில் கண்டனங்கள் ஓயாத நிலையில் அவர் சனாதனம் பற்றி பேசி புதிய விவாதத்தை உருவாக்கி இருக்கிறார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள  ராகவேந்திரா மடத்தின் பொன்விழா  நிகழ்வில் பங்கேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது..

400 ஆண்டுகளுக்கு முன்பு ராகவேந்திரர் இந்த மண்ணில் பிறந்தார். மனித நேயம் தழைத்தோங்க வாழ்ந்தார். தமிழ்நாடு புனிதமான மண், பல புனிதர்களை தன்னகத்தே கொண்ட மண். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனதன தர்மத்தின் படி பாரதம் உருவாக காரணமாக அமைந்தது இந்த மண்.

ரிக்வேதம் எனும் சனதன தர்மம்  10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல ரிஷிகளால் வெளிக் கொணரப்பட்டது. சனாதனத்தில் மட்டுமே பாரதம் எனும் வார்த்தை இடம் பெற்றுள்ளது. அதே போல அரசியல் அமைப்பு சட்டத்திலேயே இந்தியா என்பது  பாரதம் என்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

எனவே இந்தியாவிற்கு தான் அறிமுகம் தேவை படுகிறது பாரதத்திற்கு அறிமுகம் தேவை இல்லை. ஆங்கிலேயர்கள் இந்தியா என்ற பெயரை வைத்தனர், அதை நாம் உயர்வாக எண்ணி பயன்படுத்தி வருகின்றோம். இந்த நாடு 1947- ம் ஆண்டு பிறந்ததாக நம்புகின்றனர் ஆனால் இது சனா தனத்தால் உருவான நாடு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த நாடு.  சிலர் அறியாமையின் காரணமாக சனா தனத்தில் தீண்டாமை உள்ளது, பாகு பாடு உள்ளது என்று தவறாகப் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஆனால் சனா தனத்தில் அதற்கெல்லாம் இடம் இல்லை.யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதே சனா தனத்தின் அடிப்படை. நமக்குள் எந்த வேறுபாடும் இல்லை. நாம் அனைவரும் ஒன்று என்பது தான் உண்மை. நமக்குள் வேற்றுமை உள்ளது ஆனால் வேறுபாடு இல்லை.

இவ்வாறு ஆளுநர் ரவி பேசினார்.

இதற்கு திமுக துணைப் பொதுச் செயளாலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடு்மையான கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நெறியில் வந்த தமிழ்நாட்டில் பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்திற்கும் எந்த தொடர்பும் இருந்ததி்ல்லை. வரலாறு முழுவதும் பிறரது அடையாளங்களைச் சிதைத்து தனதாக்கிக் கொள்வதைத் தான் சனாதனம் செய்துவருகிறது. அறிவியலுக்கு ஒவ்வாத புரட்டுகளைத் தவிர்த்து சனாதனத்திடம் வேறெதுவும் இல்லை.

தமிழ்நாடு எனும் திராவிடப் பெருநிலம், அவற்றை ஒரு நாளும் ஏற்றதுமில்லை. நாள் தோறும் அவதூறுகளைப் பரப்பியவாறு மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் கவர்னர் ரவி , சிறிது நேரம் அமைதிகாக்கவும்”.

இவ்வாறு கனிமொழி தெரிவித்து இருக்கிறார்.

இரு தினங்கள் முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கவதாக அறிவித்த ஆளுநர் ரவி, பிறகு மத்திய அரசின் தலையீட்டின் பேரில் அதனை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார். முறையாக ஆராயமல் ஆளுநர் ரவி செய்த இந்த செயலால் ஏற்பட்ட கடுமையான விமர்சனங்கள் இன்னும் ஓயவில்லை. அதற்குள் சனாதனம் பற்றி பேசி ரவி புதிய விவாதத்தை ஆரம்பித்து இருக்கிறார்.

கனிமொழி சொல்லி இருப்பது போல அவர் கொஞ்சம் நாள் அமைதி காக்க வேண்டும் என்ற கருத்தும் வளைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

000

 

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *