அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனையான காவேரிக்கு மாற்றிய உத்தரவுக்கும் ஆட்கொணர்வு மனுவை விசாரிப்பதற்கும் தடை விதிக்க வலியுறுத்தி அமலாக்க துறை தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டனர்.
மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஒருவரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிய பிறகு ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார். எனவே ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து இருக்கக் கூடாது என்றும் அவர் வாதிட்டார்.
மேலும் செந்தில் பாலாஜியை உடல் நிலை சரியில்லை என்று தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய பிறகு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் எப்படி விசாரணை நடத்த முடியும் என்றும் துஷார் மேத்தா கேட்டார்.
இதன் பிறகு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவரது தரப்பு வாதங்களை முன் வைத்தார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆட்கொணர்வு மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டி உள்ளது என்றனர். மேலும் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி இருந்த நாட்களை கழிப்பது தொடர்பாகவும் உத்தரவு பிறப்பிப்பது அவசியமாகும். இந்த இரண்டு அம்சங்களையும் சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெவித்தனர்.
இதன் மூலம் தெரிவது என்னவென்றால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியிடம் 8 நாட்கள் வசாரணை நடத்துவதற்கு சென்னை முதன்மை நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதால அவரிடம் நேரில் அமலாக்கத்துறையால் விசாரணை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் அவரிடம் விசாரணை நடத்துவதற்கு புதிய காலக் கெடுவைப் பெற அமலாக்கத்துறை விரும்புகிறது.