சென்னை அம்பத்தூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கு நேற்று பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அண்ணா நகர், அமைந்தகரை, அரும்பாக்கம், முகப்பேர், நெற்குன்றம், மதுரவாயல், கோயம்பேடு, வளசரவாக்கம், போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கு வரவேண்டிய பால், காலை 8.30 மணிவரை வரவில்லை.
பால் விநியோகம் தாமதமானதாலும், ஆவின் பால் கிடைக்காததாலும் தனியார் பாலை பெரும்பாலான மக்கள் வாங்கிச் சென்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரத்து குறைவு, ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினை போன்ற காரணங்களால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பால் முகவர்கள் கூறும்போது, ‘‘பால்வரத்து குறைவு, தொழிலாளர்கள் பிரச்சினைக்கு அரசு விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும்’’ என்றனர். ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, ‘‘பால் விநியோகம் தடையின்றிநடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன’’ என்றனர்.