May 28, 2023
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.வி.கங்கா பூர்வாலாவுக்கு, தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று காலை பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, மும்பை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகிக்கும் சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை நியமிக்கு மாறு, உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஏப். 19-ல் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது.
அந்தப் பரிந்துரையை ஏற்று,மத்திய அரசு குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தது. அதன்படி, எஸ்.வி.கங்கா பூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலாவுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தால், அவர் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.