ஜுலை,07-
அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது டிஸ்ட்ரிபியூசன் டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் வழங்கியதில் 397 கோடி ரூபாய் இழப்பை அரசுக்கு ஏற்படுத்தி உள்ளதாக அறப்போர் இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் சென்னையில் வியாழன் அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது..
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த இரண்டு வருடங்களாக 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் செய்த ஊழல் தொடர்பான துல்லியமான ஆதாரங்களை வெளியிடுகிறோம்.
சுமார் நாற்பது நபர்கள் பத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் ஒரே ஒப்பந்த விலையை கொடுத்து சமமாகப் பிரித்துக் கொண்டு கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் ஒப்பந்தத்திற்கு 800 கோடி ரூபாய்க்கு கொடுக்க வேண்டியதற்குப் பதில் 1100 கோடி ரூபாய்க்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
பல தரபட்ட ஆதாரங்களை சந்தை மதிப்பீட்டில் ஆராய்ந்து இந்த முடிவுகளை வெளியிடுகிறோம். டெண்டர் குழுவில் இருக்கும் காசி என்பவர், டெண்டர் scrutinizing commitee யிலும் இருக்கிறார், இந்த கூட்டு மோசடியை தடுக்காமல் அனைவரிடமும் ஒரே விலையை அளிக்க வேண்டும் என்று காசி அறிவுறுத்தி உள்ளார்.
ராஜஸ்தான் மாநில அரசு ஒரு டிரான்ஸ்பார்மருக்கான விலையை ரூ 7 லட்சத்து 87 ஆயிரம் என்று நிர்ணயித்து டெண்டர் வெளியிட்டது. ஆனால், தமிழ் நாடு அரசு 12 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் என்று ஒரு டிரான்ஸ்பார்மருக்கு விலை நிர்ணயித்து டெண்டர் கோரியுள்ளது. இந்த கணக்குப்படி ஒரு டிரான்ஸ்பார்மரில் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டு இருக்கிறது.
250 kva திறன் கொண்ட ஒரு டிரான்ஸ்பார்மர் 7, 29,600 ரூபாய் என அனைத்து ஒப்பந்ததாரர்களும் விலை கொடுத்து உள்ளனர். இந்த விலையை ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்துள்ளோம். அந்த மாநிலங்கள் இதை விட குறைவான விலைக்குத்தான் டிரான்ஸ்பார்மரை வாங்குவதற்கு ஒப்பந்தங்களை கோரியுள்ளன. இதன் படி 397 கோடி ரூபாய் அளவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தமக்கு வேண்டிய காசி என்பவர் மூலம் ஊழல் செய்துள்ளார். இவ்வளவு பெரிய தொகைக்கான ஊழலை சிறு அதிகாரிகளால் செய்ய முடியாது.
அதிகாரி காசி மின்சார துறை அலுவலகத்திற்கு செல்வதில்லை. காலை முதல் மாலை வரை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்க்கு சென்று பணி செய்கிறார், ஒரு அடிமட்ட வேலையில் பணிபுரியும் அதிகாரி அமைச்சர் வீட்டிற்க்கு தினமும் செல்ல வேண்டிய காரணம் என்ன ?
கடந்த மாதம் 30- ஆம் தேதி வருமான வரித்துறை சோதனை நடந்து கொண்டிருந்த போதும் மின்சார துறை அதிகாரி காசி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்தார். இவ்வளவுக்கும் அவர் கடந்த ஆட்சியில் 2010 செப்டம்பரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்.
கடந்த 2020- ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காசிக்கு கட்டாய பணி ஓய்வு கொடுக்கபட்டது. அதன் பிறகு அவர், திமுக ஆட்சிக்கு வந்த உடன் 2021 – ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் TANTRANSCO பொருளாதார மேலாளராக ( financial controller) நியமிக்கப்பட்டார். பணி நீக்கம் செய்யப்பட்டவர் எப்படி நியமிக்கப்பட்டார்?
இந்த ஊழலில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கும் மிக பெரிய பங்கு உள்ளது, அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, காசி, ராஜேஷ் லகாணி, செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். ஏற்கனவே ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் , இந்த 397 கோடி ரூபாயை இழக்காமல் இருந்திருந்தால் எத்தனையோ நல்ல திட்டங்களை தொடங்கி இருக்க முடியும்.முதல் கட்டமாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் நீதி மன்றத்தை நாடுவதாக இருக்கிறோம்.
இவ்வாறு ஜெயராமன் பேட்டியில் கூறினார்.
செந்தில் பாலாஜி தரப்பு இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறதோ?
000