மே.4
தமிழகம் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வரும் 06.05.2023 மற்றும் 07.05.2023 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.
இதனிடையே, நாட்டின் பல மாநிலங்கள் மழை மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது கோடை காலம் நிலவி வரும் நிலையில், வட மாநிலங்களில் வெப்பக்காற்று வீசியதால் கடந்த சில வாரங்களாக வெப்பநிலையில் அதிகமானது.
இந்நிலையில், கோடை வெப்பத்தில் இருந்து மக்களை குளிர்விக்கும் விதமாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலங்களில் அடுத்த இரண்டு மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யும் எனவும், பின்னர் மே 14க்கு மேல் வெப்பம் மீண்டும் உச்சமடையும் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல, நாட்டின் வடமேற்கு மாநிலங்களில் அடுத்த இரண்டு மூன்று நாள்களுக்கு நல்ல மழையும், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆங்காங்கே பனிப்புயல் வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாட்டின் மத்தியப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும், கிழக்கு மத்தியப் பிரதேசத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.