மே.9
தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை 2021ம் ஆண்டு மே 7-ம் தேதி ஆட்சி அமைத்தது. பதவியேற்ற ஓராண்டுக்குள் அமைச்சரவையில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த வரிசையில், கடந்த டிசம்பர் 14-ம் தேதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். டிசம்பர் 15ம் தேதி 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டன.
இந்நிலையில், அமைச்சர்கள் மற்றும் துறை ரீதியான செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில், துறை ரீதியான செயலாளர்களை மாற்றவும், தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
அந்த வகையில், தமிழக அரசின் நிதித்துறை, சட்டத்துறை, பால்வளத்துறை, தகவல் தொழில்நுட்பம், செய்தித்துறை, கைத்தறி ஆகிய துறைகளில், அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதித்துறை அமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜனுக்குப் பதிலாக, தொழில்துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு நியமிக்கப்படலாம் என்றும், பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை கூடுதலாக ஒதுக்கவும் வாய்ப்பிருப்பதாகவும், தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் கயல்விழிசெல்வராஜ் ஆகியோர் நீக்கப்படலாம் என்றும் தெரிகிறது. அமைச்சர்கள் ரகுபதி அல்லது மனோ தங்கராஜ்க்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்படலாம் என்றும், டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறையும், மனோ தங்க ராஜூக்கு சுற்றுலாத்துறையும் ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக தமிழரசியை நியமிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.