மே.10
தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், தட்டச்சர் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளுக்கான காலியிடங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால், ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளதோடு, வழக்குகளின் நிலுவையும் உயரும் நிலை உருவாகியுள்ளது.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பால், அன்றாட நிர்வாகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, வழக்குகளில் சாட்சிகளின் வாக்குமூலப் பதிவு, இடைக்கால உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளை தயார் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட உரிமையியல், கூடுதல், உதவி அமர்வு நீதிமன்றங்கள்மற்றும் சிறப்பு நீதிமன்றங்களில், உதவி யாளர்கள், அலுவலக உதவியாளர்கள், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் கடந்த ஓராண்டாக நிரப்பப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சென்னை உட்பட மாநிலம் முழுதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில், சுருக்கெழுத்தர், தட்டச்சர் உட்பட, பல்வேறு பதவிகளுக்கு 4,690 இடங்கள் காலியாக உள்ளன.
சென்னை மாவட்டத்தில் மட்டும், 524 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதன் காரணமாக, தினமும் குறைவான வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு பட்டியலிடப்படுகின்றன. சில நேரங்களில் வழக்கு விசாரணையும் தள்ளி வைக்கப்படுகிறது. மேலும், டி.என்.பி.எஸ்.சி. மூலம் சமீபத்தில் நியமிக்கப்பட்ட ஊழியர்களில் சிலர் பணியை ராஜினாமா செய்துவிட்டனர். இதுபோன்ற காரணங்களால், ஐந்து பேர் செய்ய வேண்டிய பணியை, ஒரே ஊழியர் செய்யக் கூடிய அளவில் பணிச்சுமை இருப்பதாகக் கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால், வழக்குகளின் நிலுவை அதிகரிக்கும் நிலை உருவாகும்.
தற்போதைய நிலவரப்படி திருப்பூர் மாவட்டத்தில் 246 இடங்களும், சேலம் மாவட்டத்தில் 237 இடங்களும், கோவை மாவட்டத்தில் 218-ம் திருவள்ளூர் மாவட்டத்தில் 203-ம் காஞ்சிபுரத்தில் 184ம், சிவகங்கை மாவட்டத்தில் 184 இடங்களும், திருச்சியில் 181 இடங்களும் காலியாகவுள்ளன. அவற்றில் 72 மாவட்ட நீதிபதிகள், 66 சீனியர் சிவில் நீதிபகிள், 158 சிவில் நீதிபதி பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. இதேபோல், 524 நிர்வாக ஊழியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதன்படி, தலைமை கிளார்க் – 45, உதவியாளர்கள் – 105, இளநிலை உதவியாளர்கள் – 42, தட்டச்சர் – 47, சுருக்கெழுத்தருடன் கூடிய தட்டச்சர் – 26, அலுவலக உதவியாளர் – 22 உள்ளிட்ட பணிகள் காலியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.