ஜுலை,28-
காங்கிரஸ-திமுக கூட்டணி என்றாலே மக்களுக்கு ஊழல் தான் நினைவுக்கு வருகிறது என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார். அவர், ராமேஷ்வரத்தில்.தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலையின் “என் மண், என் மக்கள்” நடை பயணத்தை ஆரம்பித்து வைத்து பேசுகையில் இந்த விமர்சனத்தை முன் வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் சென்று பின்னர் கார் வழியாக ராமேஷ்வரம் சென்றடைந்தார். அவரது வருகையை முன்னிட்டு ராமேஷ்வரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கடந்த முறை அவர் சென்னை வந்திருந்த போது மின்சாரம் தடைபட்டது பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. இதனால் மின்சாரம் தடை படாமல் பார்த்துக் கொள்ளுமாறு பொறியாளர்களை மின் வாரியம் கேட்டுக் கொண்டு இருந்தது.
நடைபயணத்தை தொடங்கி வைத்து அமித்ஷா பேசியதாவது..
“அண்ணா மலை மேற்கொண்டு உள்ள நடை பயணம் தமிழ் கலாச்சாரத்தை நாடு முழுதும் கெண்டு சேர்க்கும். பிரதமர் மோடி ஆட்சியில் தமிழின் பெருமை உலகம் முழுவதும் சென்று சேர்ந்து உள்ளது. காசி தமிழ்ச் சங்க விழா காரணமாக தமிழ் கலாச்சாரம் நாடு முழுவதும் அறியப்பட்டு இருக்கிறது.பிரான்சில் திருவள்ளுவருக்கு சிலை வைக்கப்படும் என்ற மோடி தெரிவித்து உள்ளார். இலங்கையில் ரூ 120 கோடி செலவில் தமிழ் கலாச்சார மையம் அமைக்கப்பட உள்ளது.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசுதான் காரணம்.
இன்று அவர்கள் இந்தியா என்று கூட்டணிக்கு பெயர் வைத்திருப்பதால் எதுவும் நடந்து விடப் போவதில்லை.சோனியா காந்திக்கு ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும், ஸ்டாலினுக்கு தனது மகன் உதயநிதியை முதலமைச்சராக்க வேண்டும், மம்தா பானர்ஜிக்கு அவரது உறவினர் அபிஷ்க் பானர்ஜியை முதலமைச்சராக்க வேண்டும். இதற்காகத்தான் இவர்கள் கட்சி நடத்துகிறார்கள்.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் ரகசியங்களை வெளியிட்டுவிடுவார் என்ற பயம் ஸ்டாலினுக்கு இருக்கிறது. அதனால் தான் அவரை நீக்க மறுத்து வருகிறார்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
அண்ணாமலை தமது நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு கூட்டணி கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர் தாம் செல்லாமல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அனுப்பி வைத்திருந்தார். அழைப்பு அனுப்பப்பட்டும் பாமக தலைவர் அன்புமணி. தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியேரும் ராமேஷ்வரம் பக்கம் தலைகாட்டவில்லை.
அண்ணாமலை பயணம் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்ட மன்றத் தொகுதிகள் வழியாகவும் செல்ல உள்ளது. மொத்தம் 166 நாட்கள். ஆங்காங்கு பொதுக்கூட்டங்கள் நடைபெறும். முக்கியமான நகரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
அனைத்து தொகுதிகளுக்கும் செல்லும் நடைபயணம் சென்னையில் ஜனவரி 11- ஆம் தேதி நிறைவடையும் என்று தெரிவித்து உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று தெரிகிறது.
பயணத்தின் போது புகார் பெட்டி ஒன்று எடுத்துச் செல்லப்படுகிறது. இதில் பொது மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று கூறி இருக்கின்றனர்.
இதனால் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஏதோ ஒரு வகையில் அண்ணாமலை செய்திகளில் அடிப்பட்டுக் கொண்டு இருப்பார் என்பது மட்டும் உண்மை.
இதற்கு முன்பு 1982 ல் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேல் திருட்டுப் போனதற்கு நீதி கேட்டு கலைஞர் நடைபயணம் மேற்கொண்டார். அதன் பிறகு 1984- ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது.
காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த குமரி அனந்தன் மது விலக்குக் கோரி நடைபயணம் செய்தார். அதனால் மதுக் கடைகள் மூடப்படவில்லை.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 1995-ஆம் ஆண்டு குமரியிலிருந்து நெடும்பயணம் மேற்கொண்டார். அதன் பிறகு 1996- ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை,
இப்போது பாஜகை வலுப்படுத்துவதற்காக அண்ணாமலை நடை பயணம் தொடங்கி இருக்கிறார்.
பார்க்கலாம்.
000