ஏப்ரல் 21
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி 12 மணி நேர வேலை மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்; இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5-வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது; அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை என்பது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசனின் விளக்கம்.