ஏப்ரல்.15
திருத்தணி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததால் பதற்றம் நிலவிவருகிறது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள பள்ளிப்பட்டு தாலுகா அத்திமஞ்சேரிப்பேட்டையில் அம்பேத்கர் பிறந்தநாள் முன்னிட்டு ஒரு தரப்பினர் அம்பேத்கர் படத்தை வைத்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். மற்றொரு தரப்பினர், தமிழ் புத்தாண்டு முன்னிட்டு முருகர் சிலை ஊர்வலம் எடுத்து வந்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த காவலர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டதோடு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார், ஜே.சி.பி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.
இருதரப்பிடையே நடைபெற்ற இந்த மோதலில், 10 பேர் படுகாயம் அடைந்தனர். மோதல் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், அத்திமஞ்சேரிப்பேட்டையில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்புக்காக அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த மோதலின்போது, அண்ணா சிலை சேதப்படுத்தப்பட்டதாகக் கூறி ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தனர்.