மே.30
திருநள்ளாறில் உள்ள உலகப் புகழ்பெற்ற சனீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்வர்.
இந்த கோயிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் சனீஸ்வரருக்கு சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடந்து வருகிறது. விதவிதமான அலங்காரத்தில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
பிரம்மோற்சவ விழாவில் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை திருத்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். காரைக்கால், புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு, தேரை பக்தி கோஷத்துடன் வடம்பிடித்டிது இழுத்தனர். இந்தத் திருத்தேரோட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் தேரோட்டத்தையொட்டி இன்று திருநள்ளாறு நகரப் பகுதி முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.