ஏப்ரல்.18
கோவை மாநகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் தூய்மை பணி மேற்கொள்ளப்படாததால், அதிருப்தியடைந்த பெண் கவுன்சிலர் ஷர்மிளா சந்திரசேகர், தானே களத்தில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி பகுதியான வடவள்ளி பகுதியில் உள்ள பூங்கா மற்றும் தெருக்களில் சரிவர தூய்மை பணி மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் 38வது வார்டு அதிமுக கவுன்சிலரான ஷர்மிளா சந்திரசேகரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு, கவுன்சிலர் தூய்மை பணி மேற்கொள்ளும்படி பல முறை தெரிவித்தும், எந்த விதமான பணியும் நடைபெறவில்லை என க்கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த கவுன்சிலர் ஷர்மிளா தானே இறங்கி, தூய்மை பணியை மேற்கொள்ள திட்டமிட்டார்.
அதன்படி, முதற்கட்டமாக வடவள்ளி பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான க்ரியோ கார்டன் பார்க் புதர்கள் மண்டி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ள நிலையில், அதனை சுத்தம் செய்யும் வகையில் பெண் கவுன்சிலர் ஷர்மிளா புதர்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
இதனையறிந்த அப்பகுதி மக்கள் கவுன்சிலருடன் இணைந்து பணியை மேற்கொண்டனர். கடந்த 2ஆண்டுகளாக பூங்காக்கள் பராமரிக்கப்படாததால் அங்கிருந்த பொருட்கள் மாயமானதுடன், மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. கோவையில் மாநகராட்சி கவுன்சிலரே களத்தில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.