ஏப்ரல்.15
தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வரும் 17ஆம் தேதி முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இரவு ஊரடங்கு, முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட கட்டுபாடுகளை விதிக்க மாநில அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வருகின்ற 17ஆம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தனபால், அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதனால் நீதிமன்றத்தில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படுகிறது. அதன்படி, நீதிமன்றத்திற்கு வரும் ஊழியர்கள், வழக்கறிஞர்கள், காவலர்கள், பார் கவுன்சில் உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும்.
நீதிமன்ற வளாகம், அறைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதியிலும் கிருமி நாசினி இருப்பதை உறுதி செய்து, அனைவரும் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.