மே.3
பாஜக-வில் வாரிசு அரசியல் என்பது இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தனியார் தொலைக்காட்சிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டியளித்தார். அதில், கர்நாடகாவில் எடியூரப்பாவின் மகனுக்கு சீட் வழங்கப்பட்டது வாரிசு அரசியல் இல்லை என்று அமித்ஷா தெரிவித்தார்.
மேலும், வாரிசு அரசியலுக்கும், ஒரு அரசியல்வாதியின் மகன் தேர்தலில் போட்டியிடுவதற்கும் வித்தியாசம் உள்ளது என்றும், பாஜக யாருடைய குடும்பப் பிடியிலும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி மீதான தரக்குறைவான விமர்சனங்களை முன்வைக்கும் எதிர்க்கட்சிகளின் மலிவான செயல்கள் பிரதமர் மோடி மீதான அன்பை அதிகரிக்கும் என்றும் கர்நாடக மாநிலத்திலும் இது எதிரொலிக்கும் என்றும் அமித்ஷா கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக இதை போன்ற கீழ்த்தரமான சிந்தனையுடன் பிரச்சாரங்களுக்குச் செல்வதில்லை என்றும், பிரதமர் இந்தியாவின் கண்ணியத்தை நிலைநாட்டியுள்ளதோடு, ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளார் என்றும் புகழாரம் சூட்டினார். மேலும், நாட்டின் பாதுகாப்பைப் பேணியுள்ள பிரதமரை தரக்குறைவாக வசைபாடுவது என்பது வாக்காளர்களிடம் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.