பா.ஜ.க-வின் 43-வது ஆண்டுவிழா நேற்று கொண்டாடப்பட்டது. அது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “சமூகநீதி முழக்கத்தை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திய எதிர்க்கட்சிகளைப்போல் இல்லாமல், சமூகநீதிக்காகவும், அனைத்துப் பிரிவினரின் முன்னேற்றத்துக்காகவும் பா.ஜ.க பாடுபடுகிறது. அதை எழுத்திலும் உணர்விலும் பின்பற்றுகிறது. 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் கிடைப்பது, 5 லட்சம் முதல் 50 கோடி ஏழைகளுக்குப் பாரபட்சமின்றி இலவச சிகிச்சையளிக்கும் வசதியளித்திருப்பது ஆகியவை சமூகநீதியின் நிரூபணம்” என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் `சமூகநீதி’ பேச்சு குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, சமாஜ்வாடி கட்சியின் ஆதரவுடன் சுயேச்சை உறுப்பினராக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கபில் சிபல் பிரதமர் மோடியின் சமூகநீதி கருத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் ‘பா.ஜ.க சமூகநீதிக்காக வாழ்கிறது, அதை எழுத்திலும் உணர்விலும் பின்பற்றுகிறது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
1) 2012 – 2021 வரை உருவாக்கப்பட்ட 40 சதவிகித செல்வம் மக்கள் தொகையில் 1 சதவிகிதத்தினருக்கு மட்டுமே சென்றிருக்கிறது.
2) 2022-ல் அதானியின் செல்வம் 46 சதவிகிதம் அதிகரித்தது.
3) ஜி.எஸ்.டி வரியில் 64 சதவிகிதம், 50 சதவிகித அடித்தட்டு மக்களிடமிருந்தும் வந்திருக்கும் நிலையில், 4 சதவிகிதம் மட்டுமே 10 சதவிகித மேல்தட்டு மக்களிடமிருந்து வந்திருக்கிறது.
பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாகிக் கொண்டிருக்க, ஏழைகள் இன்னும் ஏழைகளாகிக் கொண்டிருக்கின்றனர்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.