.
ஜனவரி-10,
பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை அளிக்கப்படும் வகையில் தமிழ்நாடு அரசு, சட்டத்தில் திருத்தம் செய்து உள்ளது.
இதற்கான சட்டத் திருத்த மசோதாவை சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் மொழிந்தார்.
புதிய சட்டத்தின்படி பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை விதிக்கப்படும் கடுங்காவல் தண்டனை, 14 ஆண்டுகள் வரை அதிகரிக்கபட்டு உள்ளது.
காவல்துறை ஊழியரோ, அவரது நெருங்கிய உறவினரோ பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால், 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக தண்டனை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் என்பது திருத்தப்பட்ட சட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
கூட்டாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறவர்களுக்கு ஆயுள் தண்டனையில் இருந்து மரண தண்டனை விதிப்பதற்கு புதிய சட்டத் திருத்தம் வகை செய்கிறது.
மீண்டும் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுப்பதோடு பிணையில் விடுவிக்காதபடியும் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த மசோதாவை சட்டப் சபையில் அறிமுகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி பெண்களுக்கு அதிகாரம் அளிக்க தமிழ்நாடு அரசு வழிவகுத்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் மின்னணு உள்ளிட்ட பல்வேறு வழிமுறை மூலம் பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்பு கரம் கொண்டு தமிழ் நாடு அரசு ஒடுக்குகிறது என்றும் ஸ்டாலின் தெவித்தார்.
*