ஆகஸ்டு,20-
நடிகர் ரஜினிகாந்தின் இமயமலை பயணம் இந்த முறை சாமன்ய மக்களுக்கும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
‘மலைக்கு போனோமா.பாபாஜி குகையில் தியானம் செய்தோமா’ என்கிற அளவிலேயே அவரது பயணம் சுருக்கமாக இருக்கும். ஆனால் இந்த முறை அப்படி இல்லை. பயணத்தை முடித்துகொண்டு ரஜினி ஊர் திரும்பவில்லை.மாநிலம் மாநிலமாக சென்று அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.சொல்லி வைத்த மாதிரி அனைவருமே பாஜக தலைவர்கள்.பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்கள்.
ரஜினியின் திட்டம் என்ன? பார்க்கலாம்.
ஜெயிலர் பட ரிலீசுக்கு முந்தைய நாள் ரஜினிகாந்த் இமய மலைக்குச் சென்றார். ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமம், ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமம், பத்ரிநாத் கோவில் போன்ற இடங்களுக்கு சென்ற அவர், பாபாஜி குகையில் தியானம் செய்து தனது ஆன்மிக பயணத்தை நிறைவு செய்தார்
மலை இறங்கிய ரஜினி, அடுத்த கட்டமாக அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார். ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை ராஞ்சியில் சந்தித்து உரையாடினார். பின்னர் லக்னோ புறப்பட்டு சென்ற ரஜினி, உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை சந்தித்தார். உ.பி மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியாவுடன் ‘ஜெயிலர்’ படத்தை பார்த்துள்ளார்.
மற்றுமொரு முக்கிய நிகழ்வாக உ.பி. மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் ரஜினிகாந்த் சந்தித்தார். அவரது காலில் விழுந்து ரஜினி ஆசி பெற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அரசியல் தலைவர்களுடனான ரஜினியின் இந்த தொடர் சந்திப்புகள், ‘மரியாதை நிமித்தமானவை’என்று சொல்லப்படுவது,நம்பும் படியாக இல்லை.ரஜினி சந்தித்து பேசிய அனைத்து தலைவர்களும் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்கள்.இவர்களை சந்திக்க ஒரு மாதம் அல்லது ஒரு வாரத்துக்கு முன்பே ‘அப்பாய்மெண்ட்’ வாங்கி இருக்க வேண்டும்.
ஆக, சென்னையில் இருந்து புறப்படும் போதே ஒரு மாஸ்டர்பிளானுடன் தான் ரஜினி இமயமலை சென்றுள்ளார். எட்டுமாதங்களில் மக்களவை தேர்தல் வரவிருக்கும் நிலையில்,பாஜக தலைவர்களை ரஜினி சந்தித்தது அரசியல்
முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
‘அரசியலுக்கு ஒரு போதும் வரமாட்டேன்’என அவர் தமிழகசட்டசபை தேர்தலுக்கு முன்பாக திட்டவட்டமாக அறிவித்தார்.ஆனாலும் அவரின் ஆழ் மனதுக்குள் அரசியல் ஆசை இல்லாமல் இல்லை.
ஜெயிலர் பட கேசட் வெளியீட்டு விழாவில் பேசிய அவர்,’ எனக்கு குடிப்பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் பெரிய உயரம் எட்டி இருப்பேன்’ என்றார்.’’இன்னும் உயரம்’’என்றால் அரசியல் என்பது,சூப்பர்ஸ்டாரை அறிந்த சின்னக்குழந்தைக்கும் தெரியும்.
இப்போது ரஜினி, குடிப்பதில்லை.அடுத்த கட்டத்துக்கு உயர்வதற்காகவே, பாஜக தலைவர்களை அவர் சந்தித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
000