மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதீய ஜனதா அரசைக் கண்டு திமுக அரசு அஞ்சுகிறதா அல்லது துணிச்சலுடன் எதிர்கொள்கிறதா என்று விவாதம் நடத்துகிறவர்களுக்கு புதிய ஆதாரம் ஒன்று கிடைத்து உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. அந்தக் கட்சிக்கு சட்டசபையில் பெரும்பான்மை பலமும் உள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவும் உட்கட்சி சண்டையால் ஆளும் திமுக அரசை முழுமையாக எதிர்க்க முடியாமல் திணறுகிறது.
ஆனால் தமிழ் நாட்டில் எந்த ஒரு தேர்தலிலும் ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெறும் அளவுக்கு செல்வாக்கு இல்லாத பாரதிய ஜனதா மறைமுகமாகவும் நேரடியாகவும் கொடுக்கும் இடைஞ்சல்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல என்பதை பால் கொடுக்கும் குழந்தையைக் கேட்டால் கூட சொல்லிவிடும்.
மேலும் டெல்லியில் அதிகாரத்தில் இருப்பதால் அவர்கள் சொல்வதைக் கேட்காவிட்டல் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற ஒன்றை ஏவி அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பார்கள் என்ற அச்சமும் இங்கு உள்ளவர்களுக்கு அதிகமாகவே உள்ளது என்ற பேச்சும் உலவுகிறது.
இந்தச் சூழலில் இந்திய அரசியலில் பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் சென்னை வந்த போது திடீரென மின்சாரம் நின்று போனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது திமுக அரசின் திட்டமிட்ட வேலை என்று பாஜக நிர்வாகிகள் சகட்டுமேனிக்கு பொரிந்து தள்ளினார்கள்.பயந்து போன அன்றைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இல்லை, இல்லை சென்னையில் மின் நுகர்வு அதிகமானதால் தான் மின் வெட்டு ஏற்பட்டது என்று விளக்கம் கொடுத்து சமாளித்தார்.
அதன் பிறகு வேறு ஒரு வழக்கில் அவர், கைது செய்யப்பட்டது வேறு கதை.
இப்போது என்ன என்றால், தமிழ் நாட்டில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளின் போது தடையில்லா மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின் வாரிய இயக்குநர் அனைத்து மண்டல மின் வாரிய பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர் துரைமுருகன் இன்னும் இரண்டு அமைச்சர்கள் உடன் உதக மண்டலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது திடீரென மின்சாரம் நின்று போனது. கோபம் அடைந்த துரைமுருகன், உடனே செல்போனில் மின்வாரிய பொறியாளரைத் தொடர்புக் கொண்டு, “மந்திரிகள் கலந்துகிற நிகழ்ச்சியில கூட மின்சாரத்தை நிறுத்துவியா?” என்று விளாசினார். இந்த செய்தி எல்லா ஊடகங்களிலும் வெளியானது. ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜியோ மற்ற அதிகாரிகளே கண்டு கொள்ளவில்லை.
இப்போது பா.ஜ.க. அமைச்சரான அமித்ஷா வரவேற்பில் மின்சாரம் நின்று போனதால் மட்டும் விளக்கத்தின் மேல விளக்கம் தருகிறது. உத்தரவு மேல உத்தரவு போடுகிறது.
000