கோவை துடியலூரில் உள்ள அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் விதமாக மத்திய அரசின் சார்பில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி (PM NAM) மாணவர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில், கோவை, பொள்ளாச்சி, காரமடை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தகுதி வாய்ந்த இளைஞர்களை வேலைக்கு தேர்ந்தெடுத்து கொள்கின்றனர்.
நேற்று நடைபெற்ற முகாமில், தேசிய விமானப்படை உட்பட 25 நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகளை தொழிற்பழகுநராக தேர்வு செய்தனர். ITI முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாகவே இந்த முகாம் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கும் அவர்களுக்கு தகுந்தார்போல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த முகாமில் 25 நிறுவனங்கள் பங்கேற்று, சுமார் 800 காலி இடங்களுக்கான பணியாளர்களை தேர்வு செய்வதாக கோவை மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் வளர்மதி தெரிவித்துள்ளார்.