மகாராஷ்டிராவில் வெயிலால் சுருண்டு விழுந்து 13 பேர் பலி – உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் சோகம்

ஏப்ரல். 17

மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில், வெயிலின் தாக்கத்தால் 13 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயக்கமடைந்த 100க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் சமூக ஆர்வலர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு மாநில அரசு விருது வழங்கும் விழா நடைபெற்றது. அங்குள்ள பிரமாண்ட திறந்தவெளி மைதானத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

காலை 11.30 மணிக்கு தொடங்கிய விருது வழங்கும் விழா மதியம் 1 மணி வரை நடந்தது. அந்த நேரத்தில் வெயில் 38 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருந்ததால், மைதானத்தில் பந்தல் எதுவும் போடப்படாத நிலையில், கோடை வெயிலை தாங்க முடியாமல் கூட்டத்திற்கு வந்திருந்த பலரும், அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதில், 13 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெயிலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, அவரது மகன் ஆதித்யா தாக்ரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்ரே, வெயிலால் பாதிக்கப்பட்ட 4 முதல் 5 பேரிடம் கலந்துரையாடினேன். அவர்களில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அரசு நிகழ்ச்சி முறையாக திட்டமிட்டு நடத்தப்படவில்லை. இதனை யார் விசாரிக்கப்போகிறார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *