தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளின் நிர்வாகிகளும் பல வகையான கருத்துகளை வெளியிட்டதால் அண்மைக்காலமாக இரு தரப்பினரிடையே பிரச்சனை இருந்துவருகிறது. இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “2024 மக்களவைத் தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயம் என்றார். மேலும், தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் பிராந்திய கட்சிகள் என்றும், 2024 இல் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது, அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் தேர்தல் அது என்றார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மட்டுமே அதிமுக தலைமை வகித்தது என்று கூறிய அண்ணாமலை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை பாஜகதான், ஆக, மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி என்றும் தெரிவித்தார்.
அண்மையில் சென்னையில் ரைசிங் இந்தியா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய உள் துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் கூட்டணி தொடர்பான விவாதங்களுக்கு அப்போத முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.