மதுரையில் ரூ.206 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பல்வேறு அடுக்குகளாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது.
தமிழக அரசு, தி.மு.க.மற்றும் கலைஞர் மீது பற்றுள்ள தன்னார்வலர்கள் என பல தரப்பினர் பல விதங்களில் கலைஞரை கொண்டாடுகிறார்கள். கருணாநிதி,புத்தகங்களின் காதலர். அவரது ஆழமான வாசிப்பும், படைப்பாற்றலும் தமிழ் கூறும் நல்லுலகம் அறியும்.
பள்ளிப்பருவத்தில் எழுத ஆரம்பித்தவர், 94 வயது வரை எழுதிக்கொண்டே இருந்தார்.அவர் தொடாத துறைகளே இல்லை.’எழுத்தாளர்’கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் நான்மாடக்கூடலாம் மதுரை மாநகரில்,கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ உருவாகியுள்ளது.
மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப் பணித் துறை வளாகத்தில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து அவர் நூலகத்தை பார்வையிட்டார். முன்னதாக, கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார். 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டதாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
வாகன நிறுத்துமிடம், செய்தி – நாளிதழ் சேமிப்பு, நூல்கள் கட்டும் பிரிவு போன்றவை அமைந்துள்ளன. தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டு கூடம், ஓய்வறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன.
முதல் தளத்தில் கலைஞர் பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள் – பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவு எனச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளன. நான்காவது தளத்தில், எதிர்காலக் கனவுகளுடன் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர் மற்றும் இளைஞர்களின் கனவு நனவாகும் வகையில் ஏறத்தாழ 30 ஆயிரம் புத்தகங்களுடனான பகுதி அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது தளத்தில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் தருவதற்கான பகுதி உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆறாவது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
ஐந்தாவது தளத்தில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் தருவதற்கான பகுதி உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆறாவது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவும் அதன் பயன்பாட்டுக்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது, இதன் சிறப்பு. இந்த நூலகத்தை காமராஜர் பிறந்ததினமான 15 – ஆம் தேதி, முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கலைஞா் அவர்களின் இலக்கியப் பணியை போற்றுவதற்கு இந்த நூலகத்தை விடச் சிறநத் சின்னம் இருக்க முடியாது என்று புகழ்ந்து உள்ளார். மதுரைக்கு சென்றால் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் கலைஞர் நூலகம் திகழும்.