ஏப்ரல்.28
மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” என பெயர் வைத்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2023ம் மார்ச் மாதம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல்தியாகராஜன்,” மதுரையில் சர்வதேச தரத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்படும் என்றும், தமிழ்ச் சமுதாயத்திற்கு கலைஞர் ஆற்றிய பணிகளைப் போற்றும் வகையில் அமையவுள்ள இந்த நூலகம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாசகர்களை வரவேற்கும் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த நூலகத்திற்கு அதிகாரப்பூர்வமாக, “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” என பெயர் வைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகமானது அடித்தளம் மற்றும் தரைத்தளம் முதல் ஆறு தளங்களுடன் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், அறிவியல், மருத்துவம், கணிணி அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு உட்பட அனைத்து பாடங்களிலும் புகழ்பெற்ற நூல்கள் இடம்பெறும். மேலும், இந்த நூலகமானது வாசகர்களுக்கு நூல்களை இரவல் வழங்கும் நூலகமாகவும், குறிப்புதவி நூலகமாகவும் செயல்படும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் நூல்கள், நூலகச் சேவைகள் மற்றும் வசதிகள் இந்த நூலகத்தில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.