June 11, 13
சென்னைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில்தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பாஜக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் இன்று தமிழக பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வி.கே.சிங் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். தமிழ்நாட்டிற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சென்னையில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமித்ஷா வருகையின்போது சென்னை விமான நிலையப் பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் பாஜகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மழை மற்றும் காற்று காரணமாக மின்தடை ஏற்பட்டிருக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் பேசியுள்ளார். தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அமித்ஷா வருகையின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதை கண்டித்து நேற்றிரவு பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், அது குறித்தும் ஆளுநர் ரவி, அமித்ஷாவுடன் பேசியதாக கூறப்படுகிறது.
இன்று சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் செல்லும் அமித்ஷா, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தென்சென்னை மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து வேலூர் பள்ளிகொண்டாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.