ஜூன்.1
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் இன்று நேரில் சந்திக்கிறார். அப்போது, அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு கோருவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், மத்திய பாஜக அரசுக்கும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே அதிகாரப்பகிர்வு, ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மோதல் நிலவிவருகிறது.
இதனிடையே, டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை அண்மையில் கொண்டுவந்தது. மாநில அரசின் அதிகாரத்தை பறிக்க வகை செய்துள்ள இந்த சட்டத்துக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். இதேபோல், மத்திய அரசிற்கு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
மத்திய அரசின் இந்த அவசர சட்டத்துக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்தவகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் இன்று மாலை அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கிறார்.
சண்டிகாரில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று மாலை 4 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வந்தடைகிறார். இதேபோல பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் சென்னை வருகிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினை மாலை 4.30 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசவுள்ளார்.
அப்போது, மத்திய அரசு கொண்டுவந்த அவசர சட்டத்தின் பாதகம் குறித்தும், மத்திய அரசு ஒருதலைபட்சமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துக்கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கேட்பார் எனத் தெரிகிறது.